×

பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் கோயில் கிரிவல பாதை தார்சாலையாக மேம்பாடு செய்யப்படுமா?

பாடாலூர், மார்ச் 20: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் திருக்கோயில் கிரிவலப் பாதையை தார்சாலையாக மேம்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பாடாலூர் பூமலை மீது சஞ்சீவிராயர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த பூமலையின் அடிவாரத்தில் அருள்மிகு வழிதுணை ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில்களில் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெறும். இத்திருக்கோயில்கள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

சுற்றுலா செல்பவர்கள், ஐயப்ப சுவாமி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள் என்பது போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இதுபோல் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயில்களில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பூ மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். மண் சாலையாக இருந்த இந்த கிரிவல பாதை கடந்த ஆண்டு மெட்டல் சாலையாக போடப்பட்டது. அந்த சாலை தற்போது ஜல்லிகள் பெயர்ந்து மிகவும் மோசமாக உள்ளது. இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் நடக்க முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த கிரிவல பாதையை தார் சாலையாக மேம்பாடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Badalur Poomalai Sanchivirayar Temple Kiriwala Path ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...